திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.91 திருவாரூர் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
1
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே.
2
துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.
3
உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே.
4
பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே.
5
பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே.
6
வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே.
7
அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத் திருத்த மாகுமே.
8
துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.
9
கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.
10
சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.105 திருவாரூர்
பண் - வியாழக்குறிஞ்சி
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.
1
சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே.
2
உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழுந்திடுமின் கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.
3
வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே.
4
வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.
5
கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்
தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே.
6
நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத தொழுவாரும் புண்ணியரே.
9
செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞானமொழிந் தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே.
10
நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com